ஷாவ்மி நிறுவனத்தின் 5,551 கோடி முடக்கம்: கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனத்தின் ₹5,551 கோடியை முடக்க உத்தரவிட்ட அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல செல்போன்ற நிறுவனமாவ ஷாவ்மி, கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. சீனாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து இங்கு பல்வேறு நிறுவனங்கள் உதவியுடன் செல்போன்களை தயாரித்து வருகிறது. ஷாவ்மி நிறுவனம் சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு பெரும் தொகையை அனுப்பியது. மீதம் உள்ள பணத்தை இந்திய வர்த்தகத்துக்காக எச்எஸ்பிசி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டெய்ட்ச் வங்கிக் கணக்குகளில் வைத்து இருந்தது. அதிலிருந்து கூடுதல் தொகை ராயல்டி என்ற பெயரில் வேறு நாடுகளில் உள்ள கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சட்ட விரோதமாக இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என கூறி ஷாவ்மியின் ₹5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள், வங்கி டெபாசிட்டை அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் முடக்கியது.

அமலாக்க துறையின் நடவடிக்கையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஷாவ்மி வழக்கு தொடர்ந்தது. வழக்கு நேற்று நீதிபதி ஹேமந்த் சந்தானகவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர்கள் கணேஷ் மற்றும் சஜன் பூவையா ஆஜராயினர். அவர்கள் வாதிடுகையில், ‘‘ பணம் அனுப்பியதில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) கீழ் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. அதற்கான கட்டணம் கழிக்கப்பட்ட பிறகுதான் பணத்தை அனுப்ப வருமான வரித்துறை அனுமதி அளித்தது. வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைக்கப்பட்டிருந்தால்தான் பெமா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்று கூறினர்.

அமலாக்க துறையின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதி மத்திய நிதித்துறை மற்றும் அமலாக்க துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.