இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எரிபொருளுக்கும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ராஜபக்சே குடும்பத்தினரை குற்றம் சாட்டி இருக்கும் மக்கள், அவர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் நேற்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வணிக வளாகங்கள் மூடப்பட்டதால், சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்திற்கு சுகாதாரத் துறை, அஞ்சல் துறை, துறைமுகம், ரயில்வே, போக்குவரத்து துறை, மின்சாரத் துறை, வங்கிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்பு என அனைத்து சங்கங்களும் ஆதரவு அளித்தன. அதேபோல அங்குள்ள மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களில் சிலர் நாடாளுமன்ற்தில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டது.

இந்த நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில், இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். நள்ளிரவு முதல் அவசர நிலை அமலுக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் வர்த்தமானி எனப்படும் கெஜட் வெளியாகி உள்ளது.முன்னதாக இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.