ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம்: கனிமொழி கண்டனம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இது, மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஜிப்மர் என்பதன் முழு பெயர் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பதாகும். அண்மையில், அலுவல் மொழியாக இந்தியை மாற்றுவது தொடர்பாக, புதிய சுற்றறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் பிறப்பித்து உள்ளார். அதில், மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடுகள் மற்றும் கோப்புகளில், இதுவரை இந்தியும், ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இனி வரும் காலத்தில், அவற்றில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜிப்மர் உத்தரவுக்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என தெரிவித்து உள்ளார்.