கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. இதனை மாதத்துக்கு ஒன்று அல்லது இருமுறை ரூ.25 அல்லது ரூ.50 என்ற கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக அதிகரித்தது. 4 மாதத்துக்கு பின் கடந்த மாதம் மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதன் மூலம், அது ரூ.965.50 ஐ தொட்டது. இந்த நிலையில் இந்த மாதமும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 16 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.307 அதிகரித்து ரூ.1000-ஐ கடந்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ட்விட்டரில் கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய அரசு மக்களை துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையையும் அத்தியாவசிய பொருட்கள் விலையையும் உயர்த்துவதன் மூலம் மிகப்பெரிய கொள்ளையை பாஜக அரங்கேற்றி வருகிறது. மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர். ஊடகங்கள் ஊமையாகவும் பார்வையற்றவர்களாகவும் இருப்பது கவலை தருகிறது.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.