ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது: பூபேஷ் பாகேல்

மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

அதி தீவிர தேசியவாதத்தின் தன்மையை இந்தியா கடந்து வந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மத மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தரப்படுவது இல்லை. இந்த நிலை விரைவில் கடந்து செல்லும். ராமர் நமது கலாச்சாரத்தோடு ஒன்றியவர். பல்வேறு தருணங்களில் பல்வேறு வகையான ராமரை நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். கபீரின் ராம், துளசியின் ராம், ஷபாரியின் ராமரை நாம் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும், அறிவிலும் ராமர் வாழ்கிறார்.

தொழிலாளர்கள் ராமரை ஒரு வடிவில் பார்க்கிறார்கள். விவசாயிகள் ராமரை வேறு வடிவில் பார்க்கிறார். பழங்குடியின மக்கள் அவரை மற்றொரு வடிவில் பார்க்கின்றனர். பக்தர்களும் சிந்தனையாளர்களும் ராமரை புதியதொரு வடிவில் பார்த்து வருகிறார்கள். மகாத்மா காந்தியும் ராமரை ஒரு வடிவில் பார்த்தார். அவரது கடைசி வார்த்தைகள் ‘ஹே ராம்’. அவர் எப்போதும் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று சொல்லி வந்தவர். ஆனால் இன்றோ, மிகவும் கண்ணியமான மனிதராக, அன்பின் அடையாளமாக ஒவ்வொரு பக்தரின் உள்ளத்திலும் குடியிருந்த ராமரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் பார்க்கும் விதமும் அவர்கள் அதை வைத்து நிறுவும் கொள்கையும் மோசமானது. ராமரை சண்டைக்காரராக அவர்கள் காட்டுகிறார்கள். ராமரை வெறிகொண்டவராக நிறுவுகிறார்கள்.

அதேபோல் அனுமனை எடுத்துக்கொண்டால் அவர் பணிவு, பக்தி, அறிவின் உருவகமாக பார்க்கப்பட்டு வந்தார். அனுமனின் பழைய படங்கள் மிகவும் அழகாக இருக்கும். ஆனால், தற்போது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அனுமனை கோபக்காரராக அடையாளப்படுத்துகின்றன. அதற்கு ஏற்றார்போல் போஸ்டர்களை வெளியிடுகிறார்கள். சமூகத்தின் சிந்தனையை கட்டமைக்கிறார்கள். அன்று ராமரை வைத்து செய்ததை தற்போது அனுமனை வைத்து செய்கிறார்கள். பாஜகவின் தேசியவாத கொள்கை இறக்குமதி செய்யப்பட்டது. முசோலினியை பார்த்துள்ளீர்களா? அவரின் தொப்பி, மேளம் என அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டது. அவர்களின் தேசியவாத கொள்கையில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் இருக்காது. நமது தேசியவாத கொள்கை என்பது வேறு. இவ்வாறு அவர் பேசினார்.