ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
‘துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை என்று தமிழக அரசு அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு கூறும் கருத்துகள் தவறானவை என்று ஏற்கனவே பா.ஜ.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமுக உறவு இல்லை என்றும், பாகுபாடு பார்க்கிறார்கள் என்றும் பொய் பிரசாரம் செய்கிறார்கள். குறிப்பாக உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி, வடமாநில கட்சி பா.ஜ.க என்ற தவறான கருத்து தமிழகத்தில் பரப்பப்படுகின்றது. அதனையும் மீறி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நாட்டில் நடந்துள்ளது. முன்னேற்றம் அடைந்த நாடுகளை விட இந்தியா பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகும் வேகமாக வளரும் நாடு இந்தியா என சர்வதேச நிதி முகமை தெரிவிக்கிறது.
கொரோனா தடுப்பூசி மீது அவநம்பிக்கையும், தயக்கத்தையும் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைமை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா? அல்லது வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா? என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த நாட்டுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்த்து உள்ளது.
தாய்மொழி என்னை விடாது. நான் தாய்மொழியை விடமாட்டேன். இந்தியை கற்றதால் தமிழை மறக்கவில்லை. இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது. அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கின்றனர். பிரிவினைவாத மனநிலை கொண்டதால்தான் இப்படியான கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) இருந்து பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்களுக்கான மத்திய அரசின் பங்கு தொகை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக ரூ.7.35 லட்சம் கோடியில் ரூ.78 ஆயிரம் கோடி மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.