கோவில் நடைமுறைகளில் அரசு தலையிடக்கூடாது என்று சசிகலா கூறினார்.
மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் நடந்த யாக பூஜையில் சசிகலா கலந்துகொண்டு வழிபாடு செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்கள் 500 பேருக்கு ஆடைகளை தானமாக வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் பாரம்பரியமாக தனித்தனியே நடைமுறைகள் உள்ளது. அதில், அரசியல் செய்ய வேண்டாம். அரசு தலையிடக்கூடாது. இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் யாரும் கோவில் நடைமுறையில் தலையிட்டதில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் திருப்தியாக இல்லை. பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கு தகுந்தவாறு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
சட்டப்பேரவையில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக தெரிவிக்கிறார். 4 நாட்கள் கழித்து மின்துறை அமைச்சர் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என சட்டப்பேரவையில் தெரிவிக்கிறார். முரண்பாடு உள்ளதை சரிசெய்யவேண்டும். ஒரு ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சாதனை இல்லை. வேதனை தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.