தமிழகத்தில் தக்காளி வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தக்காளி வைரஸ் என்பது நுண்கிருமிகளில் இருந்து பரவுவதாகும். அது சாதாரண வைரஸ்தான். குழந்தைகளின் கன்னத்தில் தக்காளி போன்று பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை தக்காளி வைரஸ் என்கிறார்கள். மற்றபடி தக்காளிக்கும், வைரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்கன்குனியா பாதிப்படைந்து குணமானவர்களுக்கு இந்த நோய் வருவதாக தெரிவித்துள்ளனர். கேரளாவின் கொல்லத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரவி இருக்கிறது. தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இது பரவ வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி தக்காளி வைரஸ் பற்றி கேட்டறிந்து உள்ளோம். தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தக்காளி வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.