திமுகவுக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லையா?: டிடிவி தினகரன்

சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையா இறந்த நிலையில் வீடுகளை அகற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என முதல்வர் அறிவித்ததை டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று கண்ணையா (வயது 60) என்பவர் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுபற்றி இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது ‛ராஜா அண்ணாமலை புரம் கோவிந்தசாமி நகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் குடிசைகள் அகற்றுவதற்கு முன்கூட்டியே அங்கு வசித்து வரும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும். மறு குடியமர்வு ஏற்பாட்டுக்க பிறகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும்” என்றார். மேலும் கண்ணையாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழந்துவிட்ட நிலையில், இத்தகைய வீடுகளை அகற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். ஒருவர் உயிரை விட்ட பிறகுதான் இந்த ஞானேதயம் அரசுக்கு ஏற்படுமா?. ஆண்டுக்கணக்கில் ஓர் இடத்தில் குடியிருக்கும் ஏழை மக்களை விட்டு வெளியேற்றும்போது அவர்களுக்கு உரிய மாற்று இடத்தையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட ஆட்சியாளர்களுக்கு கிடையாதா? இவர்கள் கொடுப்பதாக கூறியுள்ள ரூ.10 லட்சம் பறிபோன உயிரை மீட்டுத்தருமா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.