இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் காரணம் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார்.