பஞ்சாப் மாநிலத்தில் உளவுத்துறை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸின் உளவுத்துறை அலுவலகத்தின் 3ஆவது மாடியில் நேற்று இரவு ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக உளவுத் துறை அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்து சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த கையெறி குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உளவுத் துறை அலுவலகத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய போலீசார் சம்பவ இடத்தை முகாமிட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும், அலுவலகத்தில் இருந்த வெடிகுண்டுகளில் சில வெடிகுண்டுகள் எதிர்பாராத விதமாக வெடித்ததாகவும் போலீசார் குறிப்பிட்டனர். இது தொடர்பாக மொஹாலி போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எஸ்ஏஎஸ் நகர், செக்டார் 77ல் உள்ள பஞ்சாப் போலீஸ் புலனாய்வுத் தலைமையகத்தில் இரவு 7.45 மணியளவில் சிறிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன” என்றார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க காவல்துறையிடம் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் தரான் மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.