ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராஜபக்சே கும்பல் சதி: சந்திரிகா

இலங்கையில் வன்முறைகளை தொடர்ச்சியாக தூண்டிவிட்டு அதனையே காரணம் காட்டி ராணுவ ஆட்சியை அமல்படுத்த மகிந்த ராஜபக்சே குடும்பம் சதி செய்வதாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் நடத்திய அரசுக்கு எதிரான போராட்டம் புதிய பிரளயத்தையே ஏற்படுத்தி வருகிறது. இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரியே பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் கோத்தபாயவும் மகிந்த ராஜபக்சேவும் அதிகாரத்தையும் பதவியையும் தக்க வைத்துக் கொள்வதிலேயே வெறியாக இருந்தனர். இதன் ஒருபகுதியாகவே பதவி விலகும் முன்பாக வன்முறை கும்பலை களமிறக்கியது ராஜபக்சே அண்ட் கோ. ஆனால் சிங்களரோ, ராஜபக்சேக்கள் ஏவிவிட்ட வன்முறை கும்பலை ஓடஓட விரட்டி அடித்தனர். அத்துடன் ராஜபக்சேவுக்கு ஆதரவாக நிற்கும் அத்தனை அரசியல்வாதிகள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனால் இனி இலங்கையில் உயிர் வாழவே முடியாது; சிங்களரே தம்மை தாக்க தொடங்கிவிட்டனர் என கருதும் ராஜபக்சே குடும்பம் நாட்டைவிட்டு தப்பி ஓடவும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வன்முறைகளை காரணமாக வைத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் தமது சமூக வலைதளப் பக்கங்களில் நீதி, ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். வன்முறைகளை தூண்டி இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.