எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தியா-சீனா இடையேயான அடிப்படை பிரச்சினையாக எல்லை விவகாரம் உள்ளது. எல்லை பிரச்சினையை தீர்க்காமல் உயிர்ப்புடன் வைத்திருப்பதே சீனாவின் நோக்கமாக இருக்கிறது’ என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘ஒரு நாடாக நமக்குத் தேவைப்படுவது; ஒட்டுமொத்த தேசம்’ என்ற அணுகுமுறை ஆகும். ராணுவக் களத்தை பொறுத்தவரை, அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டில் உள்ள நிலையை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதும், எதிர்ப்பதும் ஆகும்’ என்றும் தெரிவித்தார்.
லடாக்கில் மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்த மனோஜ் பாண்டே, அங்கு 2020-ம் ஆண்டு ஏப்ரலுக்கு முந்தைய நிலையை மீண்டும் ஏற்படுத்துவதே நோக்கம் என்றும் கூறினார்.