காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலங்கையில் இன்று நிலைமை மோசமாக இருக்கிறது. இலங்கைக்குப் பக்கத்துக்கு நாடு என்கிற அடிப்படையிலும், தமிழக மக்களின் நலன் கருதியும் நாம் உதவி செய்கிறோம். இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் கப்பல் மூலம் இந்தியா வரமுடியவில்லை. கொழும்பிலிருந்து , ஜவ்னாவிற்க்கு நிதி உதவி அளித்து ரயில் மூலம், விமான நிலையத்திற்கு வரவழைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்குத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் தீர்வே இல்லாமல், இங்குள்ளவர்கள் கத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கைக்கு டீசல், பெட்ரோல், உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளோம். இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு இந்தியா மருந்து கொடுத்து வருகிறது. இலங்கையில் 14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர், வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் சம்பளத்திற்கே போய்விடுகிறது . யாழ்ப்பாணம் தமிழர்கள் நலமாக இருக்கத் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் வடகிழக்கு பகுதியில் 46000 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. மலையகப் பகுதி மக்களுக்காக 16000 வீடுகள் கட்டித்தந்துள்ளோம். ஆனால், இதற்காக இலங்கை கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இலங்கை, இந்தியாவிடம் கேட்பது நியாயம் இல்லை.
தமிழகத்தில் இந்தியைத் திணிக்கக் கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு. மொழியைத் திணித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தர்மபுரி எம்பி செய்தியில் வர வேண்டும் என்பதற்காகக் கருத்துச் சொல்லி வருகிறார். அவருக்கெல்லாம் நான் எப்படி கருத்துச் சொல்வது. பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு எந்த கட்சிக்குப்போக மாட்டார்கள்.
காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும். மீண்டும் பிரஷாந்த் கிஷோர் தமிழகத்திற்கு வந்து, திமுகவிடம் மீண்டும் ஒப்பந்தம் போட்டு கட்சியை வளர்ப்பார். எல்.ஐ.சி. இன்னும் அரசு நிறுவனம் தான். இழப்பைச் சந்திக்கின்ற நிறுவனத்தைத் தான் தனியாருக்குக் கொடுக்கிறோம். தமிழக முதல்வர் இப்போது தான் துபாய்க்கு போய்விட்டு வந்தார்.
தமிழக முதல்வரைப் புகழ்ந்து தள்ளிய வாணிகர் சங்கத்தைச் சேர்ந்த விக்கிரமராஜா, தேர்தலுக்கு முன் மால்கள் ஏதும் தமிழகத்தில் வர அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னார். ஆனால் லூலு மால் வர காரணமானவரை விக்கிரமராஜா புகழ்ந்து தள்ளுகிறார். 6 மாதத்திற்கு முன்னே கோவையில் லூலு மால் வருவதற்கு ஆயுத்த பணிகளை மேற்கொண்டு பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் லூலு மால் வருவதற்கு ஒப்பந்தம் இப்போது போட்டதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
திருமாவளவனை விவாதத்துக்குக் கூப்பிட்டேன், அப்போது அந்த கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, நான் விவாதத்துக்கு வருகிறேன் என்றார். ஆனால் திருமாவளவன் அங்கு யாரும் செல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டார். நான் மூன்று புத்தகம் அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அங்கிருந்து ஏதும் வரவில்லை. விவாதத்திற்கும் வரவில்லை எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த முடியாது என்பது தேர்தலுக்கு முன்பு தெரியாதா? தேர்தலுக்காகக் கவர்ச்சியான திட்டங்களைக் கொண்டு வந்து பொய் சொல்லி வாக்கு வாங்கி விட்டு, இப்போது நிலைப்பாட்டை மாற்றுகிறார்கள். மின் தட்டுப்பாடு எதனால் என்று அமைச்சரிடம் கேட்டால் நிலக்கரி தட்டுப்பாடு என்கிறார்கள். தமிழகத்தில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படிதான் பேசுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.