மக்கள் போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு ஓடும் ராஜபக்சேக்கள்?

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால், போராட்டக்காரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க ராஜபக்சேக்கள் தங்களது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். பொதுமக்களின் போராட்டத்தை ராஜபக்சே குடும்பத்தினர் கண்டுகொள்ளாததன் விளைவாக, தலைநகர் கொழும்பு உள்பட நாடு முழுவதும் இன்று போராட்டம் வெடித்தது. ஆளுங்கட்சி பிரமுகர்கள். மேயர்கள் உள்ளிட்டோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீக்கிரையாக்கியும் வருகின்றனர்.

தமக்கு எதிரான நாட்டு மக்களின் போராட்டம் உச்சத்தை அடைந்ததையடுத்து வேறு வழியின்றி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ள மக்களின் போராட்டம் இன்னும் அடங்கவில்லை. இதனால் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் கோத்தய, பிரதமர் மகிந்த என ராஜபக்சேக்கள் இன்றிரவு குடும்பத்துடன் வெளிநாட்டு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கொழும்பில் ஐந்து விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகனான நாமல் ராஜபக்சே ஏற்கெனவே தமது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில், தற்போது ராஜபக்சே சகோதரர்களும் நாட்டை வி்ட்டு தப்பியோட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை நாட்டை ஆண்டு வந்த ராஜபக்சேக்கள், இன்று நாட்டை விட்டு ஓட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மகிந்த ராஜபக்சே பதவி விலக முடிவு செய்திருப்பதாக நேற்று காலையில் தகவல் வெளியாகி இருந்தது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அவர்களின் இந்த கொந்தளிப்பு, ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திரும்பியது. இதனால் நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடந்தது. கொழும்புவில் பிரதமர் வீட்டுக்கு எதிரே உள்ள போராட்ட பந்தல் மற்றும் காலி முகத்திடல் போராட்ட கிராமம் ஆகியவற்றில் ராஜபக்சே ஆதரவாளர்கள் கும்பலாக புகுந்தனர். அவர்கள் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களுக்கு தீ வைத்தும், பிடுங்கி எறிந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். அத்துடன் அங்கு குவிந்திருந்த போராட்டக்காரர்கள் மீது கம்பு மற்றும் தடிகளால் பயங்கரமாக தாக்கினர். உடனே போராட்டக்காரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இரு பிரிவினருக்கு இடையே நடந்த இந்த மோதலால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த பயங்கர வன்முறையில் 23 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங்கு சென்றார். அவரைப் பார்த்ததும் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஆத்திரத்துடன் அவர்களை தாக்கினர். அவர்கள் சென்ற காரும் தாக்குதலுக்கு உள்ளானது. எனவே அவர்கள் திரும்பி சென்றனர்.இந்த மோதலால் அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். போலீசாருக்கு துணையாக ராணுவமும் வரவழைக்கப்பட்டது. அவர்களும் போலீசாருடன் இணைந்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். எனினும் சம்பவ இடத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதைப்போல நாட்டின் பல பகுதிகளில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் சுமார் 130 பேர் காயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ராணுவமும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன..

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதை தொடர்ந்து இலங்கை அரசியலில் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அரசு வட்டாரங்களில் பலமாக ஒலித்து வருகிறது. அதேநேரம் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த பரிந்துரைக்கு ஆளுங்கட்சி ஒப்புதல் அளித்து விட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.