இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: மெகபூபா முப்தி

இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் மேற்கொண்ட தவறான முடிவுகளே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்ததுடன், தனது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களை தாக்கியதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், ஆளுங்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

இலங்கையின் இந்த நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, இந்தியாவுக்கு இது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் இப்போது நடப்பவற்றை பார்த்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். 2014 முதல் இந்தியாவில் வகுப்புவாத வெறி அதிகரித்துள்ளது. இலங்கையைப் போன்று தீவிர தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாத பாதையில் செல்கிறது. இவை அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்” என மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.