இலங்கையில் எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் நடந்த கலவரத்தில் மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு தீ வைக்கப்பட்டது. பல ஆளும் கட்சி எம்பிக்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த கலவரத்தின் போது இரண்டு போராட்டக்காரர்களை ஆளும் இலங்கை பொதுஜன முன்னணி எம்பி அமரகீர்த்தி அதுகோரலா துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலியானார். அதன்பின் அந்த எம்பி தன்னை தானே சுட்டுக்கொண்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சி எம்பிக்கள் போராட்டக்காரர்கள் மூலம் இவர் கொலை செய்யப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது. எம்பிக்களை சுடும் நபர்களுக்கும், இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கும் இரக்கமே காட்ட கூடாது. நமது அண்டை நாடு இன்னொரு லிபியா போல மாறிவிட கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கையில் போராட்டம் மற்றும் கலவரம் நடக்கும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய உயர் கமிஷன் இதற்கு அளித்த விளக்கத்தில், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பும் திட்டத்தில் நாங்கள் இல்லை. சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்தியா அந்த நிலைப்பாட்டில் இல்லை. இந்தியா இலங்கையின் நிலைத்தன்மை, ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை விரும்புகிறது. இலங்கையின் கொள்கைகளில் இந்தியா நம்பிக்கை கொண்டு இருக்கிறது. இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் உணர்வுகளை இந்தியா எப்போதும் மதிக்கும், என்று இந்திய உயர் கமிஷன் விளக்கம் கொடுத்துள்ளது.