பஞ்சாப்பில் ராக்கெட் குண்டு வீச்சு: ஒருவர் கைது

பஞ்சாப் மாநிலம் மெஹாலியில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் மீது ராக்கெட் கையெறி குண்டுவீசிய வழக்கில் தளவாடங்கள் வழங்கி உதவிய நபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. தினமும் உயரதிகாரிகள் அலுவலகம் வந்து செல்கின்றனர். இங்கு உளவுப் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, குண்டர் தடுப்புப் படை மற்றும் மாநில காவல்துறையின் பல பிரிவுகள் உள்ளன. இதனால் இது முக்கியமான கட்டிடமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவலகத்தின் 3வது மாடியின் மீது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சரிந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம், காயம் ஏற்படவில்லை. இருப்பினும் உளவுத்துறை தலைமையகம் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரிக்க துவங்கினர். சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் சிவசேனா மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை ஏற்பட்டதில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்தனர். இதனால் குண்டுவெடிப்பும், வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துவக்கினர்.

பஞ்சாப் டிஜிபி விகே பாவ்ரா கூறுகையில், ‘சிறிய வகையிலான ராக்கெட் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். அதிகபட்சம் 700 மீட்டர் தூரம் வரை வீசப்படும் இந்த வெடிகுண்டுகள் டேங்கர், கவச கார், ஹெலிகாப்டர் போன்றவற்றை கூட தாக்க முடியும். சில நாட்களுக்கு முன் கர்னாலில் நான்கு தீவிரவாதிகளை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து ஏராளமான தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 3 கையெறி வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டன. இதன் மூலம் காலிஸ்தான் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

இந்நிலையில் தான் குண்டுவீச்சு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பரித்கோட்டில் வசிக்கும் நிஷான் சிங் என்பது தெரியவந்துள்ளது. இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் குண்டுவீச்சு சம்பவங்களில் தளவாடங்களை இவர் வழங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிலரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் முழுவிசாரணை நடத்தி அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் டிஜிபி விகேபவ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான், சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

மொஹாலியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தின் அமைதியான சூழலை கெடுக்க முயன்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.