இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார் மோடி: ராகுல் காந்தி

குஜராத்தில் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, இரண்டு இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்குவதாக குற்றம்சாட்டினார்.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான காங்கிரசின் பிரசாரத்தை பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தஹோத் மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

இன்று, பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்கள், தொழிலதிபர்களுக்கானது, மற்றொன்று சாமானியர்களுக்கானது. இதுபோல் இரு இந்தியாக்கள் இருப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜ மாடல் ஆட்சியில், பழங்குடியினர், பிற ஏழைகளுக்கு சொந்தமான நீர், காடு, நிலம் போன்ற வளங்கள் பறிக்கப்பட்டு சில பணக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. பாஜ அரசு உங்களுக்கு எதையும் தராது. உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும். நீங்கள் தான் உங்கள் உரிமையை பறிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு அது கிடைக்கும். கொரோனா தொற்றால் குஜராத்தில் 3 லட்சம் பேர் இறந்த போது, மொபைலில் லைட் அடிக்குமாறு பிரதமர் கூறினார். இறந்தவர்களின் சடலங்கள் கங்கையில் நிரம்பின. குஜராத்தில் அடுத்ததாக காங்கிரஸ் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.