விடுதலையாவாரா பேரறிவாளன்? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. பேரறிவாளன் விடுதலை பற்றி மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால், அவரை நாங்களே விடுதலை செய்வோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

பேரறிவாளன் மனு மீது கடந்த மே 4ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.என்.நட்ராஜ் ஆஜரானார். ‘ஒரு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்ட நீதிபதிகள், அந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக் கூடாது?’ என்று தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அனைத்துத் தீர்ப்புகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது, அமைச்சரவை முடிவெடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்கவேண்டிய அவசியமே இல்லை. இது நீதிமன்றம் முடிவெடுக்கவேண்டிய விவகாரம். ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மே 10ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்தது. அப்படி மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.