முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம் என திமுக எம்பி செந்தில்குமாருக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அதன் மீது முடிவையும் எடுக்காத ஆளுநர், தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
இ்ந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசின் சிபிஐ விசாரித்த வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் தங்களுககு உள்ளது என மத்திய அரசும, தமிழக அரசும் வாதிட்டன. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில் குமார் தன் சமூகவலைதள பக்கங்களில் கையில் கிளியுடன் இருக்கும் பேரறிவாளன் படத்தை வெளியிட்டு அட்வான்ஸ் வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தான் அளித்த பேட்டியின் வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி சிதம்பரம் கூறுகையில், திரு. ராஜீவ் காந்தி அவர்களுடன் இறந்தவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லையே? கொலை குற்றவாளிகளை ஹீரோக்களாக ஆக்காதீர்கள். சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டியிலிருந்து.. என கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் ராஜீவ் காந்தி என்று இறந்தார், அவருடன் எத்தனை பேர் இறந்தனர்? அவர்களுடைய பெயர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்களை கொலை செய்தவர்களின் பெயர் மட்டும் எல்லாருக்கும் தெரிகிறது. இறந்தவர்களின் பெயர்களை நான் சொல்கிறேன். கோகிலா, காங்கிரஸ் கட்சியின் முனுசாமி, இளையான்குடி இன்ஸ்பெக்டர் இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜ் குரு, வின்சென்ட் உள்ளிட்ட 18 பேர இறந்து போனார்கள். ஆனால் நான் 5 பேரின் பெயர்களை மட்டுமே சொல்லியுள்ளேன்.
தமிழ், தமிழர் என கூறிக் கொள்ளும் கட்சிகள் எந்த 7 பேரை பற்றி மட்டுமே பேசுகிறார்களே, என்றைக்காவது ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்களின் பெயர்களை சொல்லியுள்ளார்களா? அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா, ஒரு ஆயுள் தண்டனை கைதி இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருந்தால் அதை சட்டப்படி செய்யட்டும் நான் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதற்காக அவர்களை ஹீரோக்களாக்காதீர்கள் என கூறியுள்ளார்.