ராஜபக்சே கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல், நாடு முழுவதும் பரவியுள்ளது. வன்முறையில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மகிந்த ராஜபக்சே தலைமறைவானதையடுத்து, அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சிகளில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே வருகிற 13ஆம் தேதி (நாளை) பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அடுத்த சில மணி நேரங்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை இந்த வார இறுதிக்குள் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை புதிய அமைச்சரவை பெரும்பான்மையைக் கைப்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், சிங்கள, தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்க முன்வந்துள்ளாதாக கூறப்படுகிறது. பிரதமர் பதவியை ஏற்குமாறு பல அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை அவர்கள் நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ராஜபக்சே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.