ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீது சிஐடி வழக்கு!

அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர்கள் மீது சிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு இருந்தபோது அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ஆலராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் புகார் அளித்தார். அதன் பேரில் சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் பலர் மீது சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நகராட்சி துறை அமைச்சராக இருந்த நாராயணா நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதற்கு உடந்தையாக முன்னாள் அமைச்சர்கள் லிங்கமனேனி ரமேஷ், லிங்கமனேனி வெங்கடசூர்யா ராஜசேகர் மற்றும் லிபில் புராஜக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனிகுமார் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் மீதும் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.