ஜெயலலிதா மரணம் குறித்து தேவைப்பட்டால் பழனிசாமியிடம் விசாரணை!

ஜெயலலிதா மரணம் குறித்து, தேவை என கருதினால், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரிக்கப்படும் என, ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி கமிஷன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. விசாரணை நிறை வடைந்து விட்டதாகவும், ஜூன் மாதத்துக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதிகாரப்பூர்வமாக கமிஷன் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, ஜெயலலிதா மரணம் குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி என்பவர், கமிஷனில் மனு அளித்தார். தற்போது, இந்த மனு மீது, கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று, மனுதாரர் கமிஷனை கட்டாயப்படுத்த முடியாது. கமிஷன் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கருதியதோ, அவர்களிடம் எல்லாம் விசாரணை நடத்தி முடித்து விட்டது.

முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த, மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை. மனுதாரரின் கோரிக்கை மீது, கமிஷன் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே வேளையில், அரசிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், பழனிசாமியின் வாக்குமூலம் தேவை என கருதினால், அவரிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.