இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை, மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா பல்கலையில் இன்று (மே 13) நடந்தது. தமிழக கவர்னர் ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
பட்டம் பெற்றவர்கள் புதிய வாழ்க்கையில் நுழைய உள்ளீர்கள். நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்து கொண்டு இருக்கிறது. நம்நாடு பல்வேறு இனம், மொழி கலாச்சாரம் கொண்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கபட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களின் உடல்நிலையில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. மேலும் மத்திய அரசு ஒரு மொழியை திணிக்க முயல்வதாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு இல்லை. புதிய கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்த வழிவகை செய்கிறது. தமிழ் சிறப்பான உயர்ந்த மொழி. அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற வழக்காடுதல் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் பேசி உள்ளார்.
பனாராஸ் பல்கலையில் சமீபத்தில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிறநாடுகள், மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ் இருக்கை அமைத்து இருப்பதை போல, இந்தியாவில் உள்ள பிற பல்கலைகழகங்களிலும் இருக்கை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. மத்திய அரசு அனைத்து மொழிகளும் வளர ஊக்கவிக்கிறது. புதிய கல்வி கொள்கையால் தமிழ்மொழி பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, தனது உரையின் துவக்கத்தில் ‘அனைவருக்கும் வணக்கம் என்றார். தொடர்ந்து, ‘இந்த சந்தர்ப்பத்தில் இன்று பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். இதற்கு அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து தனது உரையில்,
‛எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்’
என்ற திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறி, மாணவர்கள் தைரியமுடன் செயல்பட வேண்டும் என பேசினார்.