முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன் மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்மூலம் திட்டமிட்டபடி வருகிற 21ந் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது.
2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக முதுநிலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் (இளநிலை மருத்துவர்கள்) தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கலந்தாய்வு நடந்துகொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி இளநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2021ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து கலந்தாய்வும், 2022ம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பதால் குழப்பம் ஏற்படும். நடுத்தர மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாதிக்கும். எனவே மே 21 ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் முதுநிலை தேர்வை தள்ளிவைத்தால் உள்ளுறை மருத்துவ சேவை பாதிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
முதுநிலை நீட் தேர்வு தேதிக்கும், தற்போதைய கவுன்சிலிங் முடிவதற்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு என்பதால் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கும்படி மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பெரும்பாலான இளநிலை மருத்துவர்கள் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறுவதாகவும், இது தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். வருகிற 21 ந் தேதி திட்டமிட்டப்படி முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையில்லை எனவும் அறிவித்தனர்.
நீதிபதிகள் கூறும்போது, “தேர்வை ஒத்திவைப்பதால் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள் பெரும்பாலானோரை பாதிக்கும். இவ்விவகாரத்தில் இரண்டு வகை மாணவர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தேர்வை ஒத்தி வைக்க விரும்புகிறார்கள். மற்றொன்று 2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். அவர்கள் தேர்வுக்கு தயாரான பிறகு ஒத்தி வைத்தால் பாதிக்கப்படுவார்கள். தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாடு திரும்பி வரும் போது, நீதிமன்றம் வகுத்துள்ள நேர அட்டவணையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன், மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும். அந்த சிரமத்தை வழங்க நாங்கள் விரும்பவில்லை. எனவே தேர்வை ஒத்தி வைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர். இதன்மூலம் திட்டமிட்டபடி வருகிற 21ந் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது.