காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை: வெடித்த போராட்டம்!

ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டித் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் சதுரா கிராமத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அரசு அலுவலராக பணியாற்றி வருபவர் ராகுல் பட் (வயது 35). இவர் நேற்று வழக்கம்போல் அலுவலகம் சென்றார். சக ஊழியர்களுடன் அவர் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென்று தாசில்தார் அலுவலகத்துக்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அவர்கள் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் ராகுல்பட் உடலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ராகுல்பட்டுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கி ஏந்தி அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் பயங்கரவாதிகள் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் காஷ்மீர் டைகர்ஸ் எனும் பெயரில் சமூக வலைதளங்களில் இயங்குவதும், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் ராகுல்பட்டை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்த ராகுல்பட்டுக்கு மனைவி, 7 வயதில் மகளும் உள்ளனர். ராகுல்பட் புட்காமில் உள்ள ஷேக்புராவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வருகிறார். காஷ்மீரில் குடியேறியவர்களுக்கான பிரதமர் சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2010ல் அரசு பணியில் இவர் நியமிக்கட்ட நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி ராகுல்பட்டின் தந்தை கூறுகையில், ‛‛அலுவலகத்திற்குள் நுழைந்து ராகுல்பட் கொலை செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயமல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இதுபற்றி முறையாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என்றார்.

இந்த சம்பவமானது காஷ்மீரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிப்போர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நாங்கள் 1990களில் இருந்து கொடுமைகளை சந்தித்து வருகிறோம். எங்களுக்கு எதிரான செயல்கள் தொடர்கின்றன. நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறோம். கொலை செய்யப்படுகிறோம். இன்னும் கூட எங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை” என வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு, காசிகுண்டில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான காஷ்மீரி பண்டிட்களும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். மேலும் பாரமுல்லாவிலும் போராட்டம் நடைபெற்றது. புட்காம் மற்றும் அனந்த்நாக்கில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்கில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதுபற்றி ஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​கூறுகையில், “இந்த இழிவான பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கூறுகையில், ‛‛கொலைவெறி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன். திட்டமிட்டு இலக்குகள் செய்து கொலைகள் தொடர்கின்றது. இது அச்ச உணர்வை அதிகப்படுத்துகிறது” என்றார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, ​​”மற்றொரு நபரின் வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்னொரு குடும்பம் சீரழிந்தது. அந்த குடும்பத்தை நினைத்து இதயம் துடிக்கிறது. மேலும் காஷ்மீரில் இயல்பு நிலை எனும் நிலையை இந்த சம்பவம் பொய்யாக்குகிறது” என்றார்.

1990 காலக்கட்டத்தில் காஷ்மீர் பண்டித்களுக்கு எதிரான சம்பவங்கள் காஷ்மீரில் நடந்தன. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து நாட்டின் பிற இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். கடந்த சில ஆண்டுகளில் 3,800 க்கும் மேற்பட்ட பண்டித் ஊழியர்கள் காஷ்மீர் திரும்பினர். வேலைவாய்ப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் அவர்கள் பல்வேறு இடங்களில் பணி செய்து வருகின்றனர். 2019ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அதன்பிறகு தற்போது ஒரு வருடமாக சிறுபான்மை சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம், தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.