பிற மொழிகளை கற்றால் தமிழ் எந்த விதத்திலும் கரைந்து விடாது என்பதை கம்பர் நமக்கு கூறியுள்ளார் என, கவர்னர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரியில் கம்பன் விழாவை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
இந்த விழாவிற்கு எத்தனை சாமிகள் வந்தாலும், முதல்வர் ரங்கசாமி இருப்பது தான் சிறப்பு. ஏனென்றால், கம்ப ராமாயணத்தை கம்பர் எழுதி முடித்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கசாமியிடம் தான் அரங்கேற்றினார். அதனால், முதல்வர் ரங்கசாமி இங்கு நிரந்தரமாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பக்கபலமாக உள்ளார். ராம காதையில் சொல்லப்பட்ட நல்லாட்சி, புதுச்சேரியில் நடைபெறுகிறது. ஓராண்டாக முதல்வரும், அவரது தலைமையிலான அமைச்சரவையும், கம்பன் சொன்ன, ‘தாய் ஒக்கும் அரசை’ நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கம்பன், ராம அவதாரத்தை தமிழில் எழுத வேண்டும் என்று நினைத்தார். ஆழ்வார்களில் ஆண்டாளிடம் இருந்து அந்த உந்துதலைப் பெற்றார். அதற்காக, முதலில் வடமொழி கற்று, வடமொழியிலிருந்த ராமாயணத்தைக் கற்று, பிறகு நாமெல்லாம் பெருமைப்படும் கம்ப ராமாயணத்தை தமிழில் எழுதினார். பிற மொழியைக் கற்றால், தமிழ் எந்த வகையிலும் கரைந்து விடாது என்பதை, கம்பர் நமக்கு உணர்த்தி உள்ளார். தாய்மொழி நமக்கு உயிர். அதை சரியாகப் படிக்காமல் பிற மொழியை நிந்திப்பது மொழிப்பற்று ஆகிவிடாது. தாய் மொழியில் வளம் பெற்று பக்கபலமாக இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தான், நம் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இவ்வாறு தமிழிசை பேசினார்.