இந்திய பொருளாதாரம் கவலைக்கிடம்: ப சிதம்பரம்

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது . இதனை மீட்டெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறினார்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) நேற்று துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மாநாட்டை துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்களும், இந்தியாவின் பல்வேறு பகதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் நேற்று சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்புணர்வை தூண்டி பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். 2ம் நாளான இன்றும் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக மெதுவான பொருளாதார வளர்ச்சி தான் மத்திய பாஜக அரசின் அடையாளமாகும். கொரோனா பரவல் குறைந்த பிறகும் கூட பொருளாதார தேக்க நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுக்கு இடையேயான நிதி தொடர்பான உறவுமுறையை விரிவாக ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது. 2017ல் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி நடைமுறையின் விளைவுகளை அனைவரும் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலங்களின் நிதி நிலைமை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது. இதை சரிசெய்ய அவசர நடவடிக்கை வேண்டும். 1991ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தாராளமயமாக்கலின் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து நாட்டில் புதிய தொழில்கள், தொழில்முனைவோர் உருவாகினர். வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டதோடு, ஏற்றுமதியும் உயர்ந்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளில் 27 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் 30 ஆண்டுகளுக்கு பிறகு உலகளாவிய மற்றும் உள்நாட்டு வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பொருளாதார கொள்கையில் மறுசீரமைப்பு தேவை. இதுபற்றி சிந்திப்பது அவசியமாகும். பொருளாதார கொள்கை மறுசீரமைப்பு வறுமையில் வாடும் மக்கள், உலகளாவிய பட்டினிக்குறியீடு, பெண்கள், குழந்தைகளுக்கு உள்ள ஊட்டசத்து குறைபாடு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு வரையறுக்க வேண்டும்.

இந்தியாவில் பொருளாதார அபிவிருத்திகளை கையாளும் வழிகளை மத்திய அரசு தவறவிட்டுள்ளது. இதனால் பொருளாதார நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் மத்திய அரசு தவித்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பால் பணவீக்கத்தை அரசு துண்டுகிறது. இதனை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு தவித்து வருகிறது. பணவீக்கத்தை அதிகரித்து கொண்டே செல்வது என்பது இந்திய பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.