ஏன் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை?: மல்லிகார்ஜூன கார்கே

பிரதமர் நரேந்திர மோடி ஏன் பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை என மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அதன் இடைக்கால தலைவர் சோனியாக காந்தி செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு, கட்சியை பலப்படுத்துவது பற்றி இந்தியாவில் உள்ள கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) நேற்று துவங்கியது. 3 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் ராகுல்காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்களும், ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலான காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு முன்பு உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி மல்லிகார்ஜூன கார்கே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், 2024 மக்களை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பற்றியும் சில விஷயங்களை தெரிவித்தார். இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. அதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த விரும்புகிறோம். நம்மிடம் பணம் இன்றி மற்றவர்கள் முதலீடு செய்ய வருவார்கள் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்?. இதனால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சீரமைக்க உள்ளோம். காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக ஒரே மாதிரியான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறது.

பாஜக ஆட்சியில் அரசியலமைப்பு எந்திரங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. மாநிலங்களில் தனித்து ஆட்சி செய்யும் நடைமுறையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் குறிப்பாக பொருளாதார ரீதியாகவும், மதரீதியாகவும் கூட்டாச்சி தத்துவம் வெவ்வேறு முனைகளில் இருந்து தாக்கப்படுகிறது. தற்போது விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள், புகார் அளிப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் மவுனமாக்கப்படுகின்றனர். இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் பத்திரிகைகளுக்கு முன் வருவதில்லை என்று எனக்கு புரியவில்லை. கருத்து வேறுபாடுகளை மறந்து சுதந்திரமான பேச்சுரிமையை பாதுகாக்க வேண்டும்” என்றார்.