டெல்லி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை 70 பேர் இந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், அதில் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும். இது ஒரு பெரிய தீ விபத்து. உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண மிகவும் கடினமாக இருந்தது. காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டெல்லி அரசு உதவி வருகிறது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
இந்த நிலையில் தீ விபத்துக்கு பிறகு 3 மாடி கட்டிடத்தில் இருந்த 19 பேரை காணவில்லை எனறு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தீயில் கருகி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் அங்கிருந்து தப்பி குதித்து சென்றார்களா, அவர்களது நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தீ விபத்து நடந்த கட்டிடத்தில் உள்ள 2 கம்பெனியின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் வகையில் குற்றத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மனிஷ் லகரா தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.