அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவாரூர் நகராட்சியின் முதல் சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் 45க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தனது அரசியல் வாழ்வில் இந்தி திணிப்பிற்கான முதல் போராட்டத்தை துவக்கிய திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட தேரோடும் வீதியான தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் நகர் மன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலையாக மாற்ற கோரும் தீர்மானத்திற்கு திருவாரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரனிடம் திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் தொன்மை வாய்ந்த உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியை அரசியல் காரணம் காட்டி டாக்டர் கலைஞர் சாலை என மாற்றுவது இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
தேரோடும் வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியை, டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றப்படுவதாக நகர் மன்றத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சார்பில் கடந்த 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. தமிழக முதல்வருக்கு பெயர் மாற்றம் செய்வது தொடர்பான மன வியாதியாக உள்ளது. மோடி இதுவரை ஒரு இடத்திற்கு கூட பெயர் மாற்றம் செய்தது இல்லை என்றார். சாலை இல்லாத கிராமங்களில் சாலை அமைந்துவிட்டு அந்த இடத்திற்கு நீங்கள் கலைஞர் பெயரை வையுங்கள் தப்பு இல்லை. சாதி வேறுபாடு இருப்பதால் தான் ஜாதி பார்த்து வீடு வீடாக சென்று சாப்பிடுவதும், அதை குடும்ப தொலைக்காட்சியை வைத்து கொண்டு நாடகம் நடத்துகின்றனர். சமூக நீதி அரசு தமிழக முதல்வர் தன் வீட்டிற்கு மற்ற சாதியினரை அழைத்து உணவு அளிக்க வேண்டியது தானே. அது தான் சமூக நீதி என அனைவரும் பாராட்டுவர் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 2024ஆம் ஆண்டு 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று நாட்டுக்கு விஷ்வ குருவாக இருப்பார் என இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இந்த நிலையில், திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அண்ணாமலை உள்ளிட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட பல பாஜகவினர் மீது திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.