வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பானி பூரி தான் விற்கிறார்கள் என திமுகவினர் தொடர்ந்து பேசி வரும் நிலையில், பானிபூரி விற்பது கேவலமா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “நீங்கள் இந்தி கற்றுக் கொண்டால் ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். உங்களுக்கு வேலை கிடைக்கிறதா? எங்கள் நகரமான கோயம்புத்தூரில் சென்று பாருங்கள், இந்தி பேசுபவர்கள் அங்கு பானிபூரி விற்கிறார்கள்” என பேசினார்.
இந்தி மொழி தமிழ்நாட்டில் நமக்கென்று சொந்தக் கல்வி முறையை நாம் பின்பற்ற வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில புதிய நல்ல கொள்கைகளையும் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் பேசினார். மத்திய அரசு இந்தி மொழி அல்லாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப்பது முயற்சிப்பதாகவும் இதனை தடுக்க வேண்டும் என பரபரப்பு புகார் கிளம்பி வரும் நிலையில் ஆளுநர் முன்னிலையிலேயே பொன்முடி பேசியது தமிழக அரசியலில் சூட்டை கிளப்பியது.
அமைச்சர் பொன்முடி பொன்முடி மட்டுமல்ல திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாட்களாக இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ” வட இந்தியாவில் இந்தி படிச்சுட்டு தமிழகத்தில் கட்டிட வேலைதான் செய்யுறாங்கப்பா; இந்தியில் படித்தவர்கள் முன்னேறவில்லை; ஆனால் தமிழ், ஆங்கிலத்தில் படித்தவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுகவினர் இந்தி திணிப்பு குறித்த பேச்சுகளுக்கு தமிழக பாஜக நிர்வாகியும் கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், ” இந்தி மொழி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள் எனக்கூறும் திமுகவினர் அதே வாயால் வட இந்திய முதலாளிகளுக்கு பிரதமர் ஆதரவாக செயல்படுகிறார் என கூறுவது ஏன். வட இந்தியர்கள் என்றாலே பானிபூரி விற்பவர்கள் தான் என்ற முடிவுக்கு வந்தது யார். இந்தி திணிப்பு குறித்து தங்களது வசதிக்கு ஏற்றது போல திமுகவினர் பேசி வருகின்றனர். பொன்முடி மட்டுமல்ல தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் கூட கோமூத்ரா ஸ்டேட் என பேசினார். ஒரு மாநிலத்தை நீங்கள் அவதூறாக பேசுவது போல் தர்மபுரி தொகுதியை அவதூறாக பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா. இது என்ன மாதிரியான நாகரிகம்” என கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.