தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பதிவான சுமார் 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் வழக்குகளை திரும்பப்பெற டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று பரவலின்போது கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2019 -2020 கால கட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இறப்பு, திருமண நிகழ்ச்சிக்காக ஆன்லைனில் பதிவு செய்து இ பாஸ் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதை சிலர் தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியவர்கள், பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் தொடர்பாகவும் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தி.மு.க அரசு கடந்தாண்டு பொறுப்பேற்ற நிலையில் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஊரடங்கு காலத்தில் உத்தரவை மீறி வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் வன்முறையில் ஈடுபட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் கைவிடப்படும்’ என அறிவித்தார்.
அதன்படி தற்போது சுமார் 10 லட்சம் வழக்குகள் பொதுமக்கள் நலன் கருதி ரத்து செய்யப்படவேண்டும் என காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை தவிர அனைத்து மாவட்ட போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதேசமயம், வன்முறை வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடக்கும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.