இலங்கையில் 18-ந் தேதி விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

வருகிற 18-ந் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால், இலங்கை ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. அந்த நாளில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதனால் மே 18-ந் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகின்றன.

இதற்கிடையே, இதுதொடர்பாக இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை, இந்திய உளவு அமைப்புகள் சொன்னதாக ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும், பலநாட்டு தொடர்புடைய புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் சிலர், தற்போதைய இலங்கை கலவரத்தில், தங்களது இருப்பை உணர்த்த முயன்று வருவதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

மே 18-ந் தேதி முன்னாள் விடுதலைப்புலிகள் இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களது படுகொலைக்கு பழிவாங்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது. தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி, இலங்கை ராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய உளவு அமைப்புகளிடம் அந்த செய்தி குறித்து கேட்டோம். அதற்கு பொதுவான தகவலாக அதை வெளியிட்டு இருப்பதாகவும், மேல்விசாரணை நடத்தி இலங்கையிடம் தகவல் தெரிவிப்பதாகவும் இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தன. இருப்பினும், இந்த தாக்குதல் செய்தியும், தேச பாதுகாப்பு தொடர்பாக கிடைத்த அனைத்து உளவு தகவல்களும் உரிய முறையில் விசாரிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். ‘நாட்டை வழிநடத்தும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்க வேண்டும். நாட்டின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டம் தொடர வேண்டும்’ என, அவர் தெரிவித்தார்.