தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுதச்சென்ற மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் சென்னை, தாம்பரத்திலுள்ள சங்கர வித்யாலயா பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்குச்சென்ற பெண்ணின் ஹிஜாப்பை, அப்பள்ளி நிர்வாகம் அகற்றக்கோரிய நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியிலும் அதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியிருப்பது தேவையற்ற சலசலப்பை உருவாக்குகிறது.
உடலில் பூணூல் அணிந்துசெல்வதற்கும், நெற்றியில் திருநீறு பூசிச்செல்வதற்கும், கையில் கயிறு அணிந்து செல்வதற்கும், ருத்திராட்சை அணிந்து செல்வதற்கும் கல்விக்கூடங்கள் எவ்விதத்தடையுமிடாதபோது, இசுலாமியர்களின் ஹிஜாப் உடைக்கு மட்டும் தடையிடுவது எதனால்? எல்லோரும் அவரவரது மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குக் கல்விக்கூடங்கள் அனுமதிக்கும்போது இசுலாமியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சமத்துவமற்ற அணுகுமுறை இல்லையா?.
ஹிஜாப் அணிந்துகொண்டு தெர்வெழுதச் செல்வதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துபவர்கள் ஹிஜாப் அணிந்துகொண்டு வாக்குச் செலுத்தும்போது எதிர்ப்புத் தெரிவிக்காததேன்? அப்போது ஹிஜாப் உடை சிக்கலாகப்படவில்லை. இப்போது மட்டும் கண்ணை உறுத்துகிறதா? இசுலாமியர்களின் வாக்கு இனிக்கிறது. அவர்களது உரிமை கசக்கிறதா?
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பா.ஜனதா போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பெரும் மதப்பூசலை உருவாக்கி, சமூக அமைதியைக் குலைத்து, மதவெறியாட்டமாடியதன் விளைவாக, ஏறக்குறைய 33 ஆயிரம் மாணவிகள் தேர்வெழுத இயலாமல் போனது. இத்தகைய கோரச்சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாவண்ணம் தடுத்து, மதவெறிக்கூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையுமாகும். ஆகவே, தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.