தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் 6 பேர் சிக்கிய நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை விருந்தினர் மாளிகையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கடந்த 14ஆம் தேதி நடந்த கல்குவாரி விபத்தில் 6 பேர் சிக்கினர் அதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாவதாக மீட்கப்பட்ட நபர் செல்வம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்த நிவாணம் வழங்கப்பட்டுள்ளது. குவாரி நடத்துபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள முருகன் , ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 3 பேரை மீட்கும் பணி நடந்து வருவதாக தகவல் தெரிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், சுரங்கத்துறை நிவுணர்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு, விதிமீறல் இருந்தால் குவாரிகள் மூடப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார்ஜெயந்த் கூறுகையில், “இதுபோன்ற விபத்துக்கள் இனி வருங்காலங்களில் நடக்காத வண்ணம் தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல்கள் இருந்தால் கனிமவளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பிலும் இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகள் உள்ளது. இதில் 52 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவரிகள் சட்டப்படி ஆய்வு செய்யப்பட்டு விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள 6 குவாரிகள் மூடப்பட்டுள்ளது. அதுபோன்று தற்போது விபத்து நடந்துள்ள குவாரி உரிமையாளர்கள் மீது கனிமவளத்துறை சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
இந்நிலையில் பாறைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அவை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை தொடங்கலாம் என அறிவுறுத்திய பிறகே மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என்று மீட்பு பணிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.