கரூரிலும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடைத் தொழில் தற்போது நூல் விலை உயர்வு மேலும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடை அடைப்பு போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபடும் நிலையில், இதன்மூலம் ஏறக்குறைய ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கரூரிலும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. நூல் விலையை குறைக்க கோரி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூரிலும் சுமார் ரூ. 100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நூல் விலை உயர்வை கண்டித்து 6 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேலைநிறுத்ததால் ஜவுளித் தொழில் முடங்கியது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்துமாறு ஏற்கனவே ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்த போதிலும் நூல் விலை விவகாரத்தில் நிலைமை சீரடையவில்லை. பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. விலை உயர்வால் தமிழா ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஆலைகளில் பருத்தி மற்றும் நூல் இருப்பு குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.