பிரதமர் மோடி மற்றும் பாஜக, இரண்டு விதமான இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வருவதாக, ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கரனா கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது:-
காங்கிரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது மற்றும் ஆழமானது. உங்களின் வரலாற்றை பாதுகாக்கிறோம். அதனை அழிக்கவோ அல்லது அடக்கவோ நாங்கள் விரும்பவில்லை. எங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, உங்கள் நிலம், காடு, தண்ணீரை பாதுகாக்க வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் கொண்டு வந்தோம்.
இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. அனைவரையும் ஒன்றிணைக்க, அனைவருக்கும் மரியாதை அளிக்க, அனைவரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் சித்தாந்தங்களுடன் காங்கிரசும், மறுபுறம் பழங்குடியினரின் வரலாறு, கலாசாரத்தை பிளவுபடுத்தி அழிக்கும் சித்தாந்தங்களுடன் பாஜகவும் உள்ளன.
நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம்; அவர்கள் பிளவுபடுத்துகிறார்கள். நாங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்; அவர்கள் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவுகிறார்கள். பொருளாதாரத்தின் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்தி உள்ளது. பண மதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்துள்ளன. பொருளாதாரத்தை வலுப்படுத்த காங்கிரஸ் அரசு வேலை செய்தது. ஆனால், மோடி அரசு அதை அழித்துள்ளது. தற்போது நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாத நிலைமை உருவாகி உள்ளது.
இரு வேறு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் 2, 3 தொழிலதிபர்களுக்காக ஒரு இந்தியாவும், ஏழை, தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒரு இந்தியாவையும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். நமக்கு இரு இந்தியா தேவையில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெறும் ஒரே இந்தியா தான் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.