திருநெல்வேலி கல்குவாரியில் பாறை சரிந்து ஒருவர் பலி: மூவர் கதி என்ன?

திருநெல்வேலி அருகே தனியார் கல்குவாரியில் இரவில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் இறந்தார். இருவர் மீட்கப்பட்டனர். மேலும் மூவர் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தருவை அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கிரஷர் மற்றும் கல்குவாரி உள்ளது. 300 அடிக்கும் மேல் ஆழம் உள்ள இந்த குவாரியில் நேற்று முன்தினம் இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் ஏற்றும் பணி நடந்தது. மண் அள்ளும் இயந்திர டிரைவர்கள் 3 பேர் மற்றும் லாரி டிரைவர்கள் 2 பேர், லாரி கிளீனர் ஒருவர் என ஆறு பேர் பணியில் இருந்தனர்.

இரவு 11:00 மணி அளவில் கல்குவாரியில் ஓரத்தில் உள்ள பாறையில் நீர் கசிவு காரணமாக திடீரென சரிவு ஏற்பட்டது. பெரிய அளவிலான பாறை சரிந்து 300 அடி ஆழத்தில் நடுவில் நின்று கொண்டிருந்த இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகள் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் 6 பேரும் சிக்கிக் கொண்டனர். லேசான மழை பெய்ததோடு பாறை விழுந்து குவாரி பாதையை அடைத்துக் கொண்டதால் தீயணைப்புதுறை, போலீஸ் மீட்பு பணி தாமதப்பட்டது.

குவாரியில் இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் குண்டுக்கல் ஏற்றும் பணியில் டிரைவர்கள் இளையார்குளம் செல்வம் 22, செய்துங்கநல்லூர் விஜய் 25, நாட்டார்குளம் முருகன் 21, ஆகியோர் ஈடுபட்டனர். லாரி டிரைவர்கள் ராஜேந்திரன், செல்வகுமார், கிளீனர் முருகன் பணி செய்தபோது சிக்கினர். இவர்களில் இயந்திர டிரைவர்கள் முருகன், விஜய் ஆகியோர் நேற்று காலையில் மீட்கப்பட்டனர். இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்ட செல்வம் தலை மற்றும் உடல் வெளியே தெரிந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் இறந்தார்.

நேற்று காலையில் கலெக்டர் விஷ்ணு, எஸ்.பி. சரவணன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஈரக்கசிவு காரணமாக தொடர்ந்து பாறை சரிந்து விழுந்து கொண்டே இருந்தது. அரக்கோணத்தில் இருந்தும் பேரிடர் மேலாண்மை பேரிடர் மீட்பு குழுவினர் இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் நேற்று மாலை மீட்பு பணியை துவக்கினர்.

திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பொன்னாகுடி அருகே அடை மிதிப்பான்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், உயிருக்கு போராடுபவர்களை மீட்க கோரியும், இரவிலும் போதிய பாதுகாப்பின்றி குவாரியை இயக்கிய உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். சிலரை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இந்த கிரஷர் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதும் குவாரி குத்தகைதாரர் சங்கரநாராயணன், மற்றும் ஒப்பந்தக்காரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனிமவள சுரங்கங்கள் மீது விதிமீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. விபத்து நடந்த குவாரியில் லாரிகள் செல்வதற்கு மிகவும் சிறிய அளவிலான சுற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இரவில் சுரங்கப் பணி நடந்த பகுதியில் விளக்கு வசதி இல்லை. ஒரு வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தைக் கொண்டே லாரிகளில் கற்களை நிரப்பும் பணியை மேற்கொண்டனர். விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சபாநாயகர் அப்பாவு உடனே பதறியடித்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தார்.

கடும் மழை காரணமாக பாறைகள் திடீரென உடைந்து குவாரி உள்ளே விழுந்ததில் கொடூரமான விபத்து ஏற்பட்டது. இதுவரை 2 பேர் இங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்ததும் சபாநாயகர் அப்பாவு உடனே பதறியடித்து சம்பவ இடத்திற்கு விரைந்தார். அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பனும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். விபத்து ஏற்பட்டது எப்படி, பாறைகள் விழுந்தது எப்படி என்று ஆய்வு செய்தனர். அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளிடம் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மீட்பு பணியில் அங்கு மழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. அதோடு மீட்பு பணிகளை செய்யும் போதே அங்கு பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுந்து வருகின்றன. இதனால் உள்ளே சிக்கி இருக்கும் மேலும் மூவரை மீட்பது சிரமம் ஆகியுள்ளது. மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள இந்த சிரமம் குறித்தும் அப்பாவு அங்கு இருந்த மீட்பு படையினரிடம் கேட்டறிந்தார். மழை பெய்யுது சார்.. பாறை இடையில் விழுது.. இதனால் மீட்பு பணி கஷ்டமா இருக்கு சார் என்று அப்பாவுவிடம் அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைந்தார். அங்குதான் குவாரியில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட முருகன், விஜய் ஆகியோர் சிகிச்சை வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து அப்பாவு ஆறுதல் சொன்னார்.

அதோடு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர்களிடம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரைவில் குணம் அடைவீர்கள். விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடக்க காரணமாக இருந்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கவலைப்பட வேண்டாம் என்று சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்தார்.

முழுமையான அனுமதி இன்றி குவாரி பணிகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வரை நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான உரிமையாளர் சங்கரநாராயணன், மேலாளர் செபஸ்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.