காற்றாலை மின்சாரத்தை அரசு அதிகளவில் கொள்முதல் செய்யாததால் வீணாய் போயுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் நேற்று முன்நாள் 12 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதில் 5.22 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே மின்வாரியம் கொள்முதல் செய்திருக்கிறது. அதனால் கடந்த 15 ஆம் தேதி 6.77 கோடி யூனிட் மின்சாரம் யாருக்கும் பயன்படாமல் வீணாய் போயிருக்கிறது. மழை காரணமாக மின் தேவை குறைந்துவிட்ட நிலையில் அனல் மின் நிலைய உற்பத்தியையும் குறைத்து விட்ட மின்வாரியம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரக் கொள்முதலையும் குறைத்து விட்டது. அதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி குறைக்க மறுக்கும் மின்சார வாரியம், காற்றாலை மின்சாரத்தின் அளவை மட்டும் விருப்பம் போலக் குறைப்பது எந்த வகையில் நியாயம்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், அதிக அளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தால் அதை மின் சந்தையில் விற்பனை செய்ய முடியும். அதைக் கருத்தில் கொண்டு காற்றாலை மின்சாரத்தை வாரியம் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.