பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை நிர்ணய நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் கேலிக்கூத்தானது. அதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தானின் சட்ட விரோதமான மற்றும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகள் உள்பட இந்தியாவின் உள் விவகாரங்களில் கருத்து தெரிவிக்கவோ, தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

பாகிஸ்தானில் உள்ள தலைமை தனது சொந்த வீட்டை சீரமைக்காமல், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதும், ஆதாரமற்ற மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வருத்தமளிக்கிறது. இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தின் உள்கட்டமைப்பை மூட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.