நெல்லை – முன்னீர்பள்ளம் குவாரி விபத்துக்கு காரணமான, ஆளும் அரசியல் புள்ளிகள் மீது நடவடிக்கை தேவை என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், பொன்னாங்குடியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இ ருவர் இறந்துள்ளனர்; இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க, மாவட்ட நிர்வாகமும், இந்த அரசுமே பொறுப்பேற்க வேண்டும். ஆறுகளில் மணல், குளங்களில் செம்மண், விளை நிலங்களில் சரளை மண் அள்ளுதல், மலைகளையும், பாறைகளையும் உடைத்து, ஜல்லி மற்றும் எம் – சாண்ட் தயாரித்தல் போன்ற பணிகள், சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், 5, 10 அடிக்கு அனுமதி பெற்று, எவ்வளவு சுரண்ட முடியுமோ, அந்த அளவிற்கு இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இது, பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் அவலம்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, இது போன்ற எல்லா குறைகளையும் சுட்டிக்காட்டிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், எல்லா சட்ட விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டுள்ளது. கிராமங்களுக்கு மிக அருகில் இயங்கக்கூடிய கல் குவாரிகள், மிக ஆபத்தான ஆழத்தில் சென்ற கல் குவாரிகள் போன்றவற்றை கூட மூடாமல், அனுமதி அளித்ததன் விளைவாக, இப்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பினாமி பெயர்களில் நடக்கும் குவாரிகளில், ஆளும் அரசியல் புள்ளிகளும் பங்குதாரராக இருக்கும் காரணத்தினாலேயே, இது போன்ற சட்ட விரோத குவாரிகள் நடப்பதும், விபத்துகள் ஏற்பட்டு, அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும். கனிமவள கொள்ளை நடக்கும் என்பதற்கு இலக்கணமாக, இப்போது எல்லா செயல்களும் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளின் பாதுகாப்பு தன்மை குறித்தும், முழுமையாக விஞ்ஞான ரீதியாக ஆய்வு மேற்கொண்ட பின், பாதுகாப்பை உறுதி செய்த பின், அவை இயங்க அனுமதி அளிக்க வேண்டும். நில அபகரிப்புகள் மீண்டும் துவங்கி விட்டன. அது துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
குவாரியில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, தலா 25 லட்சம் ரூபாய்; காயமடைந்தோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும். அதே அளவுக்கு குவாரி உரிமையாளரும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த குவாரிக்கு சட்ட விரோத உரிமை அளித்தவர்கள் மீதும், பின்புலமாக இருக்கக் கூடிய அரசியல் புள்ளிகள் மீதும் உரிய வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.