கொசு ஒழிப்பு பணியில் 21 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தேசிய டெங்கு நோய் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடந்தது. மேலும் விழிப்புணர்வு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு புகைத்தெளிப்பான் எந்திரங்களுடன் கூடிய வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து அமைச்சர்கள் இருவரும் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசு சிறப்பு அதிகாரி செந்தில்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் டாக்டர் மணிஷ், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தொற்று நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நடமாடும் மருத்துவ குழுக்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உடனடி சிகிச்சை அளித்து வருகின்றன. ‘எலிசா’ முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க பரிசோதனை மையங்கள் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக 21 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை செய்து வருகின்றனர். வாகனத்தில் பொருத்தப்பட்ட புகை அடிப்பான்கள் 1,112, கையில் எடுத்துச்செல்லும் புகை அடிப்பான்கள் 7 ஆயிரத்து 87, சிறிய புகை அடிப்பான்கள் 7 ஆயிரத்து 654 மற்றும் கொசு ஒழிப்பு மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் 42 ஆயிரத்து 311 என்கிற குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆயிரத்து 400 பேருக்கு டெங்குகாய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2021-ல் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு 1 லட்சத்து 73 ஆயிரத்து 199 பரிசோதனைகள் செய்யப்பட்டு 6 ஆயிரத்து 39 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. இந்த ஆண்டு 2 லட்சம் பரிசோதனைகள் இலக்கு நிர்ணயித்து 5 மாதங்களில் 66 ஆயிரத்து 747 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 2 ஆயிரத்து 485 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.