மத்திய அரசானது உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப இந்து, முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி வருகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர், புட்கம் மாவட்டத்தில் உள்ள சதுரா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகள் 36 வயதான ராகுல் பாத் என்ற அரசு ஊழியரை அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலைக்கு ஜம்மு காஷ்மீரில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில், காஷ்மீர் பண்டிதர் சமுகத்தை சேர்ந்த மக்கள் கையில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், அரசு எங்களை பாதுகாக்க தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, காஷ்மீரில் ஏற்பட வன்முறைக்கு ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ் ’ படம்தான் காரணம் என்று இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி மீது குற்றம் சாட்டினார். இதுகுறித்து மெஹபூபா முப்தி கூறியதாவது:-
நாங்கள் காஷ்மீர் பண்டிதர்களுக்காக பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கினோம். 2016-ஆம் ஆண்டு கலவரத்தின் போதும் யாரும் கொலை செய்யப்படவில்லை. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வன்முறையை தூண்டியுள்ளது. மத்திய அரசு உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக இந்து, முஸ்லிம் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இப்போது ஞானவாபி பின்னால் இருக்கிறார்கள். நம் வழிபாடு நடத்தும் இடங்களில் எல்லாம் கடவுள் இருக்கிறார். நீங்கள் காணும் அனைத்து மசூதிகளின் பட்டியலையும் எங்களிடம் கொடுங்கள். இவ்வாறு மெஹபூபா முஃப்தி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் ’ திரைப்படத்தை தடைசெய்ய பரூக் அப்துல்லா நேற்று அழைப்பு விடுத்தார். மேலும், அவர் இந்த திரைப்படமானது அடிப்படை தன்மையற்றது . இதில் பொய்யான சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது நாட்டில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.