மூத்த குடிமக்களுக்கு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரெயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரெயிலவே தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரத்து செய்ததன் மூலம் இந்தியன் ரெயில்வேக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் இந்த விவரம் தெரிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
2020 மார்ச் 20-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இதில் 4.46 கோடியில் 60 வயதுடைய ஆண்களும், 2.84 கோடியில் 58 வயதுடைய பெண்களும், 8310 திருநங்கைகளும் பயணம் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் மூலம் ரெயில்வேக்கு 3464 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் கட்டண சலுகையை ரத்து செய்ததன் மூலம் 1500 கோடி ரூபாய் ரெயில்வேக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.