தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் சித்தராக இருப்பதற்கு தான் லாயக்கு என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் தனியாருக்கு சொந்தமான விடுதியில் , ‘சமூகத்தில் சமநிலை ஏற்படுத்திய மகான் அன்னமாச்சாரி’ என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த புத்தகத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கும் பின் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
இந்தியா முழுவதையும் காவி மயமாக்க வேண்டும் என மோடியும் அவரது கட்சியினரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக அது இந்தியாவில் நடக்காது. இந்திய மக்களை மொழியின் பெயரால் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதுவும் நடக்காது. இந்திய மக்கள் பல மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இன்னும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஒரு நல்லாட்சி. கடந்த ஒரு வருடமாக மிகச் சிறந்த ஆளுமை கொண்டவராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலின் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென நினைக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். செயல்படுத்தியும் இருக்கிறார்கள்.
ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொருத்தவரை வேண்டுமென்றே தவறான தகவல்களை சொல்லி இருக்கிறார்கள். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் சித்தராக இருப்பதற்கு தான் லாயக்கு. இன்னும் இரண்டு வருடங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மோடியை வீட்டுக்கு அனுப்பபோகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.