இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினர் பதவி விலகினர். இதையடுத்து, நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்த நிலையில் இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின், முதல் முறையாக இன்று நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடியதும், புதிய துணை சபாநாயகர் தேர்வு குறித்த வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
துணை சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனா சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் துணை சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டது. நண்பகல் நடந்த ரகசிய வாக்கெடுப்பின் போது, எம்பி அஜித் ராஜபக்சேவுக்கு 109 வாக்குகளும், எம்பி ரோகினி கவிரத்னவுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது மகனான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே மற்றும் பஷில் ராஜபக்சே ஆகியோர் அவைக்கு வருகை தரவில்லை.