சீனர்களுக்கு விசா வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு!

250 சீனாகாரர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான, டெல்லி மும்பை, ஒடிசா, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணை என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான சோதனைதான் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 250 விசாக்கள் வாங்கி தருவதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை பஞ்சாபில் நடைபெற்ற மின்சாரத் திட்டத்துக்கான சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 250 விசாக்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.50 லட்சம் பெற்றதாகவும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த வேலைகள் காரணமாக கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சி.பி.ஐ. தரப்பில் தன்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ. ஆர்) தனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் மீதான புதிய வழக்கின் கீழ் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விளக்கம் அளித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள எனது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளனர். டெல்லியில் உள்ள எனது அலுவலக வீட்டிலும் சி.பி.ஐ. குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை முதல் நடந்து வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்களால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. சி.பி.ஐ. தரப்பில் என்னிடம் காண்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ. ஆர்) எனது பெயர் குற்றவாளி என்று குறிப்பிடப்படவில்லை. சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் இந்த தருணம் சுவாரஸ்யமானது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.