இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம்!

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நம் கடற்படைக்காக, இரண்டு அதி நவீன போர்க் கப்பல்கள் கட்டும் ஒப்பந்தம், மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த ‘மாசகோன்’ கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதன்படி, ஏவுகணைகளை செலுத்தக்கூடிய, ‘சூரத்’ மற்றும் எதிரிகளின் ரேடார்களில் சிக்காத, ‘உதயகிரி’ போர்க் கப்பல்கள் தயாராகி உள்ளன. இவற்றை, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்படுவது, இதுவே முதல் முறை. இந்தக் கப்பல்களால், நம் கடற்படையின் பலம் அதிகரிக்கும். தற்போதுள்ள உலக பாதுகாப்பு சூழ்நிலையில், இந்தக் கப்பல்கள் நம் வலிமையை உணர்த்தும். உலகெங்கும் கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகள் முடங்கியிருந்த நிலையில், இந்தக் கப்பல் கட்டுமானம் நடந்துள்ளது பாராட்டுக்கு உரியது. மேலும், முழுதும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டு உள்ளது. இது, ‘ஆத்ம நிர்பர்’ எனும், சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சுயசார்பு நிலையை எட்டுவதுடன், உலக நாடுகளின் தேவைக்காக உற்பத்தி செய்யும் நிலையை நாம் எட்டி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.